குடியாத்தம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு


குடியாத்தம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு
x

குடியாத்தம் நகராட்சியில் தங்கள் வார்டுகளில் 6 மாதமாகியும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறி அ.தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் துணை தலைவர்கள் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

வேலூர்

குடியாத்தம் நகராட்சியில் தங்கள் வார்டுகளில் 6 மாதமாகியும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறி அ.தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் துணை தலைவர்கள் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

நகரமன்ற கூட்டம்

குடியாத்தம் நகரமன்ற சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி. சிசில்தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சிட்டிபாபு பேசும்போது, தங்கள் கட்சி உறுப்பினர்கள் வார்டில் எந்த அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறிக் கொண்டிருந்தார். அவரது கருத்தை மறுத்த நகர மன்ற தலைவர் சவுந்தரராசன், ''நகர மன்ற துணைத் தலைவர் உங்கள் கட்சியை சேர்ந்தவர்தானே. அவர் வார்டில் எவ்வளவு பணிகள் நடைபெற்று உள்ளது என்பதை அவரிடமே கேளுங்கள். இந்த நகராட்சியில் கட்சி பாகுபாடு இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகிறது'' என்றார்.

அப்போது புரட்சி பாரதம் கட்சி உறுப்பினர் மேகநாதன், அ.தி.மு.க. உறுப்பினர் சிட்டிபாபு ஆகியோருக்கும் தி.மு.க. உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு ஆகியோருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வெளிநடப்பு

அதனைத் தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள், பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் சீதாலட்சுமி, புரட்சி பாரதம் உறுப்பினர் மேகநாதன் ஆகியோர் நகர மன்ற தலைவரிடம் மனு அளித்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.

அந்த மனுவில், ''நாங்கள் நகர மன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாதம் ஆகிவிட்டது. இதுவரை வார்டுகளில் எந்த பணியும் சரிவர நடைபெறவில்லை, மக்களின் தேவைகளை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. குறிப்பாக கால்வாய் தூர்வார படுவதில்லை, குப்பைகள் சரிவர அகற்றாமல் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது. அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை'' என கூறியிருந்தனர்.

பாடுபட வேண்டும்

தொடர்ந்து உறுப்பினர்கள் பேசுகையில் குப்பைகளை தினந்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், கொசு மருந்து தொடர்ந்து அடிக்க வேண்டும். குடிநீர் கலங்கலாக வருவதை சர செய்ய வேண்டும். ஆதிதிராவிடர்கள் இறந்தால் ஈமச்சடங்கிற்க்கு ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும். வரி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நகர்மன்ற தலைவர் சவுந்தரராசன் பதிலளித்து பேசுகையில், குப்பை இல்லா நகரை உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. எல்.இ.டி.பல்புகள் பொருத்த அரசு 2 கோடியே 9 3 லட்சம் ஒதுக்கி உள்ளது. முக்கிய பகுதிகளில் அதிக வெளிச்சம் தரும் பல்புகள் பொருத்தப்படும். குடிநீர் திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து நகரின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்'' என்றார்.


Next Story