மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணராயபுரம், பணிக்கம்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணராயபுரம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் பேரூர் கழகச் செயலாளர் புல்லட் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பி.எம்.எஸ்.பாரி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் தர்மேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் முறையாக டாக்டர்கள் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். தினமும் ஒரு மணி நேரம் வந்து கொண்டிருந்த குடிநீர் தற்போது அரை மணி நேரம் மட்டுமே வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவகுளம் காலனி பகுதியில் உள்ள கோவில் அருகே கழிப்பிடம் கட்டுவதை நிறுத்த வேண்டும். கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 5-வது வார்டு பகுதியில் தற்போது கட்டப்பட்ட சாக்கடை கால்வாய் இடிந்து சேதமாகி உள்ளது. மேலும் புதிதாக போடப்பட்ட சாலைகளும் சேதமாகி உள்ளது இவைகளை சரி செய்ய வேண்டும், என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கவுன்சிலர் தங்கம்மாள், மாவட்ட கவுன்சிலர் சிவானந்தம் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பணிக்கம்பட்டி
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை, விலைவாசி, கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும்தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. மருதூர் பேரூர் கழகம் சார்பில் பணிக்கம்பட்டி சந்தை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயவிநாயகம் தலைமை தாங்கினார்.
மருதூர் பேரூர் கழக செயலாளர் பிரகாசவேல் வரவேற்றார். குளித்தலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்களும் எழுப்பப்பட்டன. கட்சி தொண்டர்கள் பலர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தங்கள் கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் சோமு.ரவி, ஒன்றிய குழு துணைத்தலைவர் இளங்கோவன், முன்னாள் பேரூர் கழக செயலாளர் ஆண்டிப்பட்டி சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.