மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாம்பரம்,
மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங், தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர், சிட்லபாக்கம் மோகன் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து கோஷமிட்டனர்.
மதுரவாயல்-மாதவரம்
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பெஞ்சமின் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாதவரம் பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அம்பத்தூர் பஸ் நிலையம் அருகில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சங்கசாவடி பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ரமணா தலைமையில் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
பொன்னேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பொன்னுதுரை, ஒன்றிய செயலாளர் முத்துகுமார், நகராட்சி செயலாளர் செல்வகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரத்தில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, வாலாஜாபாத் நகர செயலாளர் வாலாஜாபாத் மார்க்கெட் வி.அரிக்குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.