விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

விலைவாசி உயர்வை கண்டித்து ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று காலை காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பல துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுகொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அவர்கள் தக்காளி, கேரட், முள்ளங்கி, பீன்ஸ், சுரைக்காய் போன்ற காய்கறிகளை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

காப்பாற்ற நினைக்கிறார்

தமிழகத்தில் காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை சாமானிய மக்களால் சமாளிக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை பற்றி கவலைப்படுவதில்லை. மாறாக அமைச்சர் செந்தில்பாலாஜி விடுதலையாக வேண்டும் என்பதை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறார்.

கோபாலபுரத்து ரகசியங்கள் அனைத்தும் செந்தில்பாலாஜியிடம் தான் புதைந்துள்ளது. அதை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலமாக கொடுத்து விடக்கூடாது என்பதற்காக செந்தில்பாலாஜியை காப்பாற்ற நினைக்கிறார்கள்.

கண்டுகொள்ளவில்லை

செந்தில்பாலாஜி வீட்டில் சோதனையிட்ட போது முதல்-அமைச்சரின் குடும்பமே நேரில் சென்று விசாரித்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை முதல்-அமைச்சர் கண்டுகொள்ளவில்லை.பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி- சேலைகளை இதுவரை வழங்கவில்லை. அதே போல் ஜவுளித்துறைக்கு தேவையான ஜரிகைகளை தரமில்லாமல் ஆர்டர் செய்துள்ளனர். அதில் கையூட்டு பெற்றுக்கொண்டு ஊழல் செய்துள்ளனர். இதுபோன்று அனைத்து அமைச்சர்களும் ஊழலில் ஈடுபடுகின்றனர்.

40 தொகுதிகளிலும் வெற்றி

இந்தியாவின் வலிமையான பிரதமர் மோடிதான். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, போதைப்பொருள், கள்ளச்சாராயம், லாட்டரி போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழக கவர்னர் மத்திய அரசுக்கு தெரிவித்து வருகிறார். இதனால் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சம்பத், சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ஷாபுதீன், மாவட்ட இணை செயலாளர் கீதாசுந்தர், மாவட்ட பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சேதுராமன், நகர செயலாளர்கள் கே.பி.சந்தோஷம், டபிள்யூ.ஜி.மோகன், ஜிம்.சங்கர், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பெல்.கார்த்திகேயன், பெல்.தமிழரசன், சொறையூர் குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் அசோக்குமார், எழிலரசன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


Next Story