கடையம் யூனியன் துணைத்தலைவரிடம் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
கடையம் யூனியன் கூட்டத்தில் துணைத்தலைவரிடம் அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ‘எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதா?’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. யூனியன் தலைவர் செல்லம்மாள் தலைமை தாங்கினார். மொத்தமுள்ள 17 கவுன்சிலர்களில் 15 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் தங்கம், ஜனதா, மணிகண்டன், இசக்கி அம்மாள் ஆகியோர் யூனியன் துணைத்தலைவரும், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளருமான மகேஷ் மாயவனை நோக்கி, 'எங்களை பொதுவெளியில் எவ்வாறு அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுக்கலாம்?' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக மற்ற கவுன்சிலர்களும், இருதரப்பினரின் ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது துணைத்தலைவர் மகேஷ் மாயவன் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியதை தொடர்ந்து, போலீசார் உதவியுடன் மகேஷ் மாயவன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் துணைத்தலைவர் மகேஷ் மாயவன் தன்னை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கவுன்சிலர் தங்கம் கடையம் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.