வரும் 27ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நாளை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி என எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார்.
கட்சியில் 75 மாவட்டங்கள் இருந்தன. அதில் சில மாவட்டங்களை பிரித்து அமைப்பு ரீதியாக 88 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களையும் அவர் நியமனம் செய்தார். மேலும் அனைத்து சார்புஅணிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நாளை கூட்ட உள்ளார். சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றிய அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி என அறிவித்து உள்ளார்.
அதில் எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.