அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து புவனகிரியில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் கலந்து கொண்டனர்.
புவனகிரி,
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை என்.எல்.சி.நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
உண்ணாவிரத போராட்டம்
இந்த நிலையில் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டத்தை நில எடுப்பில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாய பயிர்களை அழித்த என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்தும் அ.தி.மு.க.சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமையில் புவனகிரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ.வும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ.சிவசுப்பிரமணியன், சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்க தலைவர் கானூர் பாலசுந்தரம், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், சிவப்பிரகாசம். விநாயகமூர்த்தி, கருப்பன், ராசாங்கம், கூட்டுறவு வங்கி தலைவர் பரங்கிப்பேட்டை வசந்த், ஒன்றிய அவைத்தலைவர் ரங்கசாமி, தலைமை கழக பேச்சாளர் தில்லைகோபி, புவனகிரி ஒன்றியக்குழு துணை தலைவர் வாசுதேவன், புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.