அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் சொத்து மதிப்பு அளவீடு


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.  வீட்டில் சொத்து மதிப்பு அளவீடு
x
தினத்தந்தி 18 Jan 2023 7:30 PM GMT (Updated: 2023-01-19T01:00:24+05:30)

நாமக்கல் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் சொத்து மதிப்பை அளவீடு செய்யும் பணி லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் நடந்தது.

நாமக்கல்

நாமக்கல் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் சொத்து மதிப்பை அளவீடு செய்யும் பணி லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் நடந்தது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். இவர் தற்போது நாமக்கல் நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 72 லட்சம் சொத்துக்களை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆகஸ்டு மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு 12-ந் தேதி அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகம் என 26 இடங்களில் நாமக்கல், திருச்சி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வழக்கிற்கு தொடர்புடைய ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 900-ம் ரொக்கம் மற்றும் 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

அளவீடு செய்யும் பணி

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் நாமக்கல் அசோக்நகர் பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். அவர்களுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினரும் வந்து இருந்தனர்.

இவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சொத்துகளை அளவீடு செய்து, மதிப்பிடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர் ஆவணங்களில் தெரிவித்துள்ள சொத்து மதிப்பை சரிபார்த்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பணி மாலை வரை நீடித்தது. பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் அடிநிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளுக்கு கொடுக்கும் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story