கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு


கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
x

பணிகள் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை என கூறி கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

பணிகள் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை என கூறி கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநகராட்சி கூட்டம்

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சுப. தமிழழகன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும், பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில், அ.தி.மு.க உறுப்பினர் ஆதிலட்சுமி பேசுகையில், கும்பகோணம் மாநகராட்சியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.

வாக்குவாதம்

அதற்கு துணை மேயர் சுப. தமிழழகன் பதில் அளித்து ேபசுகையில், பணிகள் குறித்து அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது சரியாக பார்க்க வேண்டும் என்றார். மேலும் ஆன்லைன் டெண்டர் தான் விடப்படுகிறது. இதை யாரு வேண்டுமானாலும் மாநகராட்சி இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம். கடந்த ஆட்சி காலத்தில் விடப்பட்ட நெடுஞ்சாலை டெண்டர் போல் இல்லை என்றார். இதனால் அ.தி.மு.க. உறுப்பினர் ஆதிலட்சுமிக்கும், துணை மேயர் சுப.தமிழழகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

(மார்க்.கம்யூ) உறுப்பினர் செல்வம் பேசுகையில், உறுப்பினர்கள் விடுக்கப்படும் கோரிக்கைகளை பதிவு செய்வதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. குறிப்பேடுகளில் குறிக்கவில்லை.

வாகனங்கள் நிறுத்த தடை

தாராசுரம் பகுதியில் தெருக்களில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்படுகிறது. பொதுவாக அளவீடு இல்லாமல் கட்டப்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்பிற்கு உட்படுகிறது. கட்டுமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தாராசுரம் பஸ் நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. மேற்கூரையுடன் உள்ளதால் அந்த பகுதியில் மார்க்கெட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் பஸ்நிலையத்தில் நிற்க முடியாமல் வெயில்,மழைக்காலங்களில்அவதியடைந்து வருகின்றனர். பஸ்நிலையத்தை சீரமைத்து வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்றார்.

அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

மீண்டும் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் ஆதிலட்சுமி, மாநகராட்சியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த எந்த தகவலும் தெரிவிக்காமல் பணிகள் முடிந்த பின்னர் தெரிவிப்பதாகவும், பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்ட தொகை மற்றும் ஒதுக்கப்பட்ட தொகை குறித்து தெரிவிப்பதில்லை. இது குறித்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

அதற்கு துணை மேயர் சுப.தமிழழகன் மக்களின் கோரிக்கையை ஏற்று பணிகளை முன்பே செய்து விட்டோம். இதனால் தற்போது இந்த கூட்டத்தில் பணிகள் குறித்து தெரிவிக்கிறோம் என்றார். தொடர்ந்து துணை மேயர் சுப. தமிழழகன் மற்றும் அ.தி.மு.க உறுப்பினர் ஆதிலட்சுமி இடையே நடந்த வாக்குவாதம் முற்றியதால் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு உரிய பதில் கொடுக்கவில்லை என்றும், பணிகள் குறித்து தெரிவிப்பதில்லை என கூறியும் கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


Next Story