அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க முடியாது -ஐகோர்ட்டு மறுப்பு


அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க முடியாது -ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 30 Jun 2022 11:09 PM GMT (Updated: 1 July 2022 10:54 AM GMT)

அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கை விசாரிக்க முடியாது என்று ஐகோர்ட்டு மறுத்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என்று பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை கொண்டு வர தடை விதித்து உத்தரவிட்டனர்.

தடை விதிக்க வேண்டும்

ஆனால், தடையை மீறி புதிய தீர்மானம் இயற்றப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், அ.தி.மு.க., பொதுக்குழுவில் ஐகோர்ட்டு தடையை மீறி, அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து, புதிய தீர்மானம் இயற்றப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவை மீறி தீர்மானத்தை இயற்ற காரணமான அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

விசாரிக்க முடியாது

இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு மனுதாரர் சண்முகம் தரப்பு வக்கீல் நேற்று முறையிட்டார். அதற்கு, தற்போது என்ன அவசரம் உள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 'வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்படுவதால், அதற்கு தடை வேண்டும்' என்று வக்கீல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை மட்டும் வருகிற 4-ந்தேதி விசாரிக்கப்படும்.

அந்த வழக்கில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் (டிவிசன் பெஞ்ச்) விசாரிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.


Next Story