அ.தி.மு.க பொதுக்குழு: ஒரு பக்கம் விறுவிறுப்பான விசாரணை ; மறுபுறம் முழு வீச்சில் கூட்ட ஏற்பாடுகள்


அ.தி.மு.க பொதுக்குழு: ஒரு பக்கம் விறுவிறுப்பான விசாரணை ; மறுபுறம் முழு வீச்சில் கூட்ட  ஏற்பாடுகள்
x

வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் 10-ந் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை

அ.திமு.க. பொதுக்குழு மேடை 80 அடி நீளம், 40 அடி அகலத்தில் 300 பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. செயற்குழுவிற்கு தனியாக ஒரு கூடாரமும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. மேடை 30 அடி நீளம், 15 அடி அகலத்தில் நிறுவப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் 100 பேர் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட் அவுட்கள் வைக்கப்பட்டு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு மேடைக்கு செல்லும் வழியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட உள்ளது. இந்த முறை ஓ.பன்னீர் செல்வம் போட்டோ கட் அவுட்டில் இடம்பெறாது என்று கூறப்பட்டுள்ளது. மாறாக எடப்பாடி பழனிசாமி முகம் மட்டும் பெரும்பாலான கட் அவுட்களில் இடம்பெறும் என்கிறார்கள். இதில் பொதுச்செயலாளர் என்ற வாசகமும் இடம்பெற உள்ளதாம்.

கடந்த முறை அ.தி.மு.க. பொதுக்குழுவில் முறைகேடு புகார்கள் வந்தன. அ.தி.மு.க பொதுக்குழுவில் இல்லாத உறுப்பினர்கள், கலர் ஜெராக்ஸ் அடித்து பொய்யான அழைப்பிதழுடன் பொதுக்குழுவிற்கு வந்ததாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான நிர்வாகிகள் இப்படி பொய்யான கலர் ஜெராக்ஸ் மூலம் பொதுக்குழுவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதில் சிலர் "கலகம்" செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு பொதுக்குழுவிற்கு வந்ததாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு புகார் வைத்தது.

பொதுக்குழுவிற்கு வரும் பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டும். ஆனால் இந்த வருகை பதிவேடு புத்தகம் கடந்த பொதுக்குழுவில் சில மணி நேரங்கள் காணாமல் போனது. இந்த இடைப்பட்ட கேப்பில் பல கருப்பு ஆடுகள் பொதுக்குழுவிற்குள் நுழைந்ததாக புகார் வைக்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இதற்கு எதிராக போர்கொடியும் தூக்கியது.

இந்த நிலையில்தான் இந்த முறை அது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மட்டுமின்றி, அதோடு கியூஆர் கோட் அடங்கிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கோடில் எல்லா விவரங்களும் அடங்கி இருக்கும். பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம், அவரின் பெயர், மாவட்டம் எல்லாம் இந்த கோடிற்கு உள்ளே இடம்பெற்று இருக்கும்.

இதனால் இந்த கோட் மூலம் எளிதாக அட்டென்டன்ஸ் எடுக்க முடியும். இந்த கோடை ஸ்கேன் செய்தால் போதும் அதுவே தானாக வருகையை பதிவு செய்துவிடும். ஒரு ஆள் ஏற்கனவே வந்துவிட்டால் அந்த கோட் காலாவதி ஆகிவிடும். இதனால் ஒரே கோடில் இரண்டு பேர் வர முடியாது. அதேபோல் பொய்யாக கோட் உருவாக்கி ஆட்கள் வர முடியாது. எனவே இந்த முறை பொதுக்குழுவில் வெளியாட்கள் நுழைவது மிகவும் கடினம் என்கிறார்கள்.

பொதுக்குழுவில் எவ்வாறு கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும், தீர்மானங்களுக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியானது இன்னும் ஓரிரு தினங்களுக்கும் நடக்கவுள்ளது.

11-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அந்ததந்த மாவட்ட கழக செயலாளர்கள் பஸ்களில் அழைத்து வர ஏற்பாடு செய்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் 10-ந் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்களை அழைத்து வர மாவட்ட செயலாளர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க.வில் 2665 பேர் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 2,432 பேர் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 2441 பேர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் சக்கர வர்த்தி தனது ஆதரவாளர்களுடன் நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுகுழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2442 ஆக உயர்ந்து விட்டது.

மேலும் சில பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வருவதற்கு தூதுவிட்ட வண்ணம் உள்ளனர்.

75 அ.தி.மு.க. மாவட்டங்களுக்கும் தனித்தனியாக கையெழுத்து வாங்க வருகைப் பதிவேடு 

பொதுக்குழு பந்தல், மேடை, உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் செய்து வருகிறார். முழு வீச்சில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

பொதுக்குழுவிற்கு வரும் உறுப்பினர்களுக்கு 'கியூஆர்' கோடுவுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அதை பெற்றுக் கொண்டு மண்டபத்தின் பிரதான ஹாலில் வருகை பதிவேட்டில் அனைவரும் கையெழுத்திட வேண்டும். கழக ரீதியாக உள்ள 75 மாவட்டங்களுக்கு தனித்தனியாக மேஜை போடப்பட்டு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது.

கையெழுத்து போட்டவுடன் அவர்கள் காலை சிற்றுண்டி சாப்பிடும் இடத்திற்கு செல்ல வேண்டும். இட்லி, பொங்கல், பூரி, கேசரி, போன்றவை வினியோகிக்கப்படும் காலை 9 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடும். அவை சிறிது நேரத்தில் முடிந்தவுடன் 9.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கும்.

செயற்குழு நடந்து முடிவதற்குள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பந்தலில் அமர வைக்கப்படுவார்கள். பொதுக்குழு முடிந்தவுடன் அனைவருக்கும் மதியம் சைவ உணவு ஏற்பாடு செயப்பட்டுள்ளது. வடை, பாயாசத்துடன் 24 வகையான உணவு பரிமாறப்படும். பொதுக்குழுவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

போலீஸ் பாதுகாப்பும் கேட்கப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவில் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழுவிற்கு வரும் நிர்வாகிகள் அனைவரும் மனநிறைவுடன் செல்லும் வகையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பந்தலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்கு தேவையான விரிவான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story