விதிமுறைகளை மீறிய அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு அடுத்த 2 கூட்டங்களில் பங்கேற்க தடை
கரூரில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் விதிமுறைகளை மீறிய அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு அடுத்த 2 கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் கவிதா கணேசன் உத்தரவிட்டன.
மாநகராட்சி கூட்டம்
கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணைமேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாதாரண கூட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
ஒப்பந்தப்புள்ளி முடிவு
அப்போது 2-வது மண்டலக்குழு தலைவர் அன்பரசன் பேசும்போது, கரூர் மாநகராட்சி மண்டலம் 3 பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி வால்வுகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அவுட்சோர்சிங் மூலம் பணி மேற்கொள்ளுதல் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி முடிவுசெய்ய பார்வைக்கு வைக்கப்பட்டது, மண்டலம் 2-ல் நெரூர், கிணறு 1, கிணறு 2 இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அவுட்சோர்சிங் பணி மேற்கொள்ள பணிக்கு ஒப்பந்தப்புள்ளி முடிவுசெய்ய பார்வைக்கு வைக்கப்பட்டது,
மண்டலம் 3 சணப்பிரட்டி-கட்டளை நீரேற்று நிலையம் மற்றும் மூலக்காட்டானூர் நீருந்து நிலையம் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அவுட்சோர்சிங் மூலம் பணி மேற்கொள்ளுதல் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி முடிவுசெய்ய பார்வைக்கு வைக்கப்பட்டது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்களில் காலக்கெடு குறிப்பிடவில்லை எனவும், அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் 62 தீர்மானங்களில் 26 தீர்மானங்கள் முன்அனுமதி என்று உள்ளது. அவசரத்திற்கு முன்அனுமதி வழங்கலாம் ஆனால் 26 தீர்மானங்களில் முன்அனுமதி என உள்ளது.
காலஅவகாசம்
மேலும் அவசர கூட்டத்தில் உள்ள 9 தீர்மானங்கள் தேதி குறிப்பிடாமல் உள்ளது அதற்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் தீர்மானம் நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். முன்அனுமதி தீர்மானம் குறித்து பதில் அளித்து மேயர் பேசும்போது, வீடுகள்தோறும் குப்பைகளை பிரிப்பதற்கு தனித்தனியாக ஆட்கள் விடப்பட்டுள்ளனர். அந்தந்த பணியாளர்கள் அந்தந்த பணிகளை செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் பணியாளர்களுக்கு 6 மாத காலம் தான் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் பணிகளை பொறுத்துதான் மீண்டும் நீட்டிப்பு செய்வது என்பது மன்றத்தின் முடிவுதான், என்றார். பின்னர் அதிகாரிகள் கூறும்போது காலஅவகாசம் என்பது 6 மாதம் தான் என்றனர்.
அனுமதி இல்லை
மாநகர நல அலுவலர் லட்சியவர்ணா கூறும்போது மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினால்தான் தூய்மை பணி, சாக்கடை தூர்வாருதல், குடிநீர் வினியோக பணிகளை மேற்கொள்ள முடியும். இல்லாவிடில் பணிகள் பாதிக்கப்படும் என்றார்.
4-வது மண்டலக்குழு தலைவர் எஸ்.பி.கனராஜ் பேசும்போது, மாமன்ற கூட்டத்தில் வழங்கப்படும் தீர்மானங்களை படிக்க முடியவில்லை எனக்கூறி கவுன்சிலர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு நாளிதழில் இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர், என்றார். அப்போது மேயர் கூறும்போது மாமன்றத்தின் விதிகளை மீறி தீர்மானங்கள் குறித்து பத்திரிகையில் கருத்துக்கூறியதற்காக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இருவரையும் அடுத்த 2 கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றார்.
ெவளிநடப்பு
அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆண்டாள் தினேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் இதுகுறித்து மாநகராட்சி ஆணையரும் கருத்து தெரிவித்துள்ளார். அவரையும் சஸ்பெண்ட் செய்வீர்களா? என்றனர். அப்போது ஆணையர் ரவிச்சந்திரன் பேசும்போது, எழுதுப்பொருள் செலவு குறித்து கேட்டதற்கு எனது பதிலை தெரிவித்தேன் என்றார். இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சுரேஷ், ஆண்டாள் தினேஷ் ஆகிய இருவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் குடிநீர் திறந்துவிடுதல், பாதாள சாக்கடை சுத்தம்செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதங்களை தெரிவித்தனர். பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது.
முன்னதாக புதுப்பிக்கப்பட்ட கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கை மேயர் கவிதாகணேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த நிலையில் 1-வது மண்டலக்குழுத் தலைவர் சக்திவேல், 2-வது வார்டு தி.மு.க. மாமன்ற உறுப்பினர் வடிவேல் ஆகியோரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த மாமன்ற உறுப்பினர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.