கோவையில் அ.தி.மு.க. போராட்டம் தேவையில்லாதது
கோவையில் சாலையின் தரத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் நடத்தும் போராட்டம் தேவையில்லாதது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கோவை
கோவையில் சாலையின் தரத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் நடத்தும் போராட்டம் தேவையில்லாதது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
அமைச்சர்கள் ஆய்வு
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கலையரங்கில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அவர்கள் மேம்பால பணிகளையும், அரசு ஆஸ்பத்திரி கட்டிட பணிகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.216 கோடி ஒதுக்கீடு
கோவை மாவட்டத்தில் 2,415 கி.மீ. தூர சாலை நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு 244 கி.மீ. சாலைகள் சீரமைக்கப்பட்டது. இதற்கு ரூ.280 கோடி செலவிடப்பட்டது. இந்த ஆண்டு 151 கி.மீ. சாலைகள் ரூ.216 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது.
மேலும் கிராமப்புற சாலைகளை தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்படி 10 ஆயிரம் கி.மீ. சாலை தரம் உயர்த்தப்படும். இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
கோவை மாவட்டம் அதிக விபத்துகள் நடைபெறும் மாவட்டமாக உள்ளது. இங்கு 37 இடங்கள் விபத்து பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 13 இடங்கள் சீர்செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் விபத்துகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தின் கோரிக்கையை முதல் - அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.
அ.தி.மு.க. போராட்டம்
கோவையில் அ.தி.மு.க போராட்டம் தொடர்பான தகவலை பார்த்து சிரிப்புதான் வருகிறது. இது தேவையில்லாதது. சாலை பழுதுக்கு 10 ஆண்டு ஆட்சி நடத்தியவர்கள் தான் காரணம். நாங்கள் வந்து 1½ ஆண்டுதான் ஆகியுள்ளது.
ஒரு சாலையின் தரம் 5 ஆண்டு காலமாகும். அவர்கள் போட்ட சாலை தவறான சாலை. அதற்கு போராடுகிறார்கள். முந்தைய அ.தி.மு.க. அரசு ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடனை வைத்துவிட்டு போய் உள்ளார்கள்.
மேம்பால பணிகள் மார்ச் மாதம் முடியும்
கோவையில் உக்கடம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் 2 மேம்பாலங்கள் வேலை நடைபெற்று வருகிறது. மார்ச் மாதத்திற்குள் இந்த மேம்பாலப்பணி முடிந்து விடும்.
மதுக்கரை முதல் மேட்டுப்பாளையம் வரை புறவழிச்சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் சரியாகும். இதற்காக முதல்கட்டமாக ரூ.250 கோடிநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் டெண்டர் விடப்படும்.
கோவை-அவினாசி ரோடு மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். காரமடை, மேட்டுப்பாளையம் பைப்பாஸ் சாலை தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
8 வழிச்சாலை திட்டம் கொள்கை முடிவு. சாலை போடப்படுமா? இல்லையா என்பதை முதல்-அமைச்சருடன் தான் பேசி முடிவு எடுக்கப்படும்.சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறநிலை துறை மூலமும் கால்நடைகள் கோசாலைகளில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.