வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 8 பேர் வெளிநடப்பு


வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 8 பேர் வெளிநடப்பு
x

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் பேசவாய்ப்பு கொடுக்கவில்லை என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 8 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வேலூர்

மாநகராட்சி கூட்டம்

வேலூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் ரத்தினசாமி, துணை கமிஷனர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் தெரிவித்த குறைகள் விவரம் வருமாறு:-

அதிகாரம் வழங்க வேண்டும்

1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா(7-வது வார்டு):- மண்டல குழு தலைவர்களுக்கான உரிமைகள் என்னவென்று தெரியவில்லை. எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறீர்கள். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கோவிலுக்கு கூட மக்களால் செல்ல முடியவில்லை. மண்டல தலைவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் மக்களுக்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும்.

2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன்(34-வது வார்டு):- கழிவுநீர் கால்வாயில் இருந்து அகற்றப்படும் மண்ணை கொட்டுவதற்கு மாநகராட்சியில் இடம் உள்ளது. இடத்தினை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கணேஷ்சங்கர்(25-வது வார்டு): மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் கேட்பாரற்ற நிலையில் வாகனங்கள் உள்ளன. எனவே 15 நாட்களுக்கு மேல் உள்ள வாகனங்களை அகற்றி, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பைப் லைன் தொடர்பான பணி மேற்கொண்டவர்களுக்கு அதற்கான தொகை வழங்கப்படவில்லை. இதனால் மற்ற பணிகளுக்கு அவர்களை அழைத்தால் வரமறுக்கிறார்கள். எனவே உடனடியாக அவர்களுக்கு பணிக்கான தொகையை வழங்க வேண்டும்.

சீனிவாசன்(6-வது வார்டு): சிறு, சிறு பணிகளை மேற்கொள்வதற்கு வார்டு உறுப்பினர்களுக்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டும். அதற்கான நிதியும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கினால் மக்களின் சிறு, சிறு அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முடியும்.

புகார்கள்

காஞ்சனா(17-வது வார்டு):- கன்சால்பேட்டை பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். முத்துமண்டபம் பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் கவுன்சிலர்கள் பலர் தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை, கழிவுநீர் கால்வாய் பிரச்சினை, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. வார்டு பகுதிகளுக்கு அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை என்று ஆவேசமாக புகார்கள் கூறினர். அதற்கு கமிஷனர் ரத்தினசாமி மற்றும் மேயர் சுஜாதா ஆகியோர் பணிகள் மேற்கொள்வதற்கான விவரங்களுடன் தெரிவித்தனர்.

பின்னர் மேயர் சுஜாதா கூறுகையில், மாநகராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் பார்க்கப்படவில்லை. தேவையை மனுவாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாநகராட்சி பகுதியில் பல கிலோ மீட்டர் அளவுக்கு மண்சாலைகள், பாதாள சாக்கடை குழாய் பதிப்பினால் சேதமடைந்த சாலைகள் உள்ளன. தற்போது மாநில நிதிக்குழு மானியம், 15-வது நிதிக்குழு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 1,549 சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூ.106 கோடிக்கு மதிப்பீடு ஒப்பந்தப் புள்ளிகோரப்பட்டு தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

வெளிநடப்பு

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர், பா.ம.க. கவுன்சிலர் பாபிகதிரவன், பா.ஜ.க. கவுன்சிலர் சுமதி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறுகையில், மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச முடியவில்லை. மைக்கினை மறைத்து வைத்துக் கொள்கிறார்கள். நாங்கள் பேச வாய்ப்பு அளிக்கவில்லை. எந்தவித பணியும் மேற்கொள்ளவில்லை. தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் பகுதிகளில் கூட பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்றனர்.

பா.ம.க. கவுன்சிலர் பாபிகதிரவன் கூறுகையில், எனது 53-வது வார்டில் குப்பை பிரச்சினை உள்ளது. அதை சரிசெய்யவில்லை. குறிப்பாக குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படாமல் உள்ளது என்றார். கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்யும் முன்பு அவர்களுக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.

157 தீர்மானங்கள்

மேலும், கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்பட 157 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story