அ.தி.மு.க.வை வட்டார கட்சியாக மாற்றி கொண்டிருக்கிறார்கள் -டி.டி.வி.தினகரன் பேட்டி
அ.தி.மு.க.வை வட்டார கட்சியாக மாற்றி கொண்டிருக்கிறார்கள் -டி.டி.வி.தினகரன் பேட்டி.
திருப்பூர்,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று அதிகாலை திருப்பூர் நல்லூரில் நடைபெற்றது. மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.டி.வி.தினகரன் பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் அமைச்சராவதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. அவருடைய தந்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 1989-ம் ஆண்டு முதன் முதலாக எம்.எல்.ஏ. ஆனார். அவருக்கு அவசர கதியில் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, அனுபவம் வாய்ந்தவர்கள் தான் அமைச்சராக இருந்தார்கள். 1996-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மேயர் ஆனார். அதன்பிறகு 2006-ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆனார்.
மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என்று தெரியவில்லை. இது அனைவரின் மனதிலும் எழும் கேள்விதான். வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து 2 முதல்-அமைச்சர்களை கூட அறிவிக்கலாம். தங்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்பு மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தற்போது சொல்வதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார்.
அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் வலுவாக போட்டியிடுகிற கட்சியாக இருந்தது. எடப்பாடி பழனிசாமியும், அவரை சேர்ந்த ஒரு குழுவினரும் அதை வட்டார கட்சியாக மாற்றி கொண்டிருக்கிறார்கள். வருங்காலத்தில் சமுதாய கட்சியாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.