அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலையில் சீராக குடிநீர் வழங்க கோரியும், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குடிநீர் பிரச்சினை

கழுகுமலையில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்ப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகத்தில் குளறுபடி நீடிக்கிறது. தற்போது 28 நாட்களுக்கு மேலாகியும் குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.12 விலை கொடுத்து வாங்கி குடிக்கும் அவல நிலை உள்ளது. அதேசமயம் கழுகுமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் கட்டணமாக மாதந்தோறும் ரூ.120 பொதுமக்களிடம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பல முறை கேட்டும் பயனில்லை.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், கழுகுமலையில் குடிநீர் சீராக வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் நேற்று கழுகுமலை காந்தி மைதானத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேச்சாளர் தீக்கனல் லட்சுமணன், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் மாரியப்பன், வார்டு செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய சாலை திறப்பு

மேலும், கயத்தாறு பேரூராட்சி பகுதியில் சந்தன மாதா கோவில் தெருவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை நேற்று முன்னாள் அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகணேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், நகர செயலாளர் ராமசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் காளிபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.வினர் இணைந்தனர்

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று அ.ம.மு.க. 25- வது வார்டு செயலாளர் வினோத் தலைமையில் 34.வது வார்டு செயலாளர் சக்தி குமார், 20-வது வார்டு செயலாளர் விக்னேஷ், மகளிர் அணி நகர செயலாளர் மீனா, பிரதிநிதிகள் கண்ணன், சுமதி ஆகியோர் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களுக்கு அவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன், ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தாமோதரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story