பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வரகூர் அருணாச்சலம், செம்மலை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழகத்தில் கள்ளச்சாராயம், போலி மது பானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி ஏற்படுகிறது. போதை பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க தவறிய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும், இவற்றிற்கு முழு பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.