அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆலங்காயத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாணியம்பாடி
ஆலங்காயத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி, திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலங்காயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவி.சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயலாளர் சிவக்குமார் வரவேற்றர்.
ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த 17 தேக்கு மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து சிக்கனாங்குப்பம் பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் டி.டி.குமார், சதாசிவம், மதியழகன், ஒன்றிய செயலாளர் சி.செல்வம், டாக்டர். திருப்பதி, ஜோதிராமலிங்க ராஜா, வெங்கடேசன், பேரூராட்சி செயலாளர் சரவணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் டில்லி பாபு நன்றி கூறினார்.