வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம்


வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பங்களை தி.மு.க.வினர் பெறுவதற்கு எதிர்ப்பு: வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,962 வாக்குச்சாவடிகளிலும் நேற்று வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிக்கான சிறப்பு முகாம்கள் நடந்தன. விழுப்புரம் நகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட வி.பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்காக இங்கு பணி நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நியமன அலுவலர் அந்த வாக்குச்சாவடியில் பணியில் இருந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று வந்தார். பின்னர் சில மணி நேரம் கழித்து அவர் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் சிலர், அந்த முகாம் இடத்தில் அமர்ந்து, புதிய வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இதற்கு அ.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணியை தி.மு.க.வினர் மேற்கொள்ளக்கூடாது என்று கூறி அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் தி.மு.க.வினர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். அதன் பிறகு அங்கு தொடர்ந்து சிறப்பு முகாம் நடக்காததால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் அங்குள்ள பொதுமக்களுடன் இணைந்து, வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்த பள்ளியின் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அ.தி.மு.க. நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து, இதுபற்றி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கூறியதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story