கோவையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து கோவையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 5 பேர் மீது மதுரை போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு அ.தி.மு.க.வினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இதை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கண்டன கோஷம்
முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் செ.தாமோதரன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள். பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
பாதுகாப்பு இல்லை
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமானத்தில் செல்லும்போது அந்த விமானத்தில் இருந்த ஒருவர் அத்துமீறி அவரை செல்போனில் படம் எடுக்கிறார். பின்னர் வெளியே வந்ததும் அந்த நபர் கண்டன கோஷம் எழுப்புகிறார். இப்படி ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் இந்த ஆட்சி எவ்வளவு மோசமாக சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
விரைவில் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்னுதாரண நிகழ்வாக இது இருக்கிறது. தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதை இந்த அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.பி. தியாகராஜன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை தலைவர் காளப்பட்டி கே.எல்.செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், கோவை தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், கோ-ஆப்டெக்ஸ் மாநில தலைவருமான வெங்கடாசலம், புறநகர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.அர்ஜூனன், மாநகர பொருளாளர் பார்த்திபன், தோட்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் வால்பாறை அமீது மற்றும் கோவை மாநகர பகுதி செயலாளர்கள் காட்டூர் செல்வராஜ், வி.ஜே.செல்வகுமார், ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் சூலூர் லிங்கசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜி.குமரவேல், வி.பி.கந்தவேல், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் பதுவம்பள்ளி செந்தில், காளப்பட்டி பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் குறிஞ்சி மலர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---