சங்கரன்கோவிலில் இன்று அ.தி.மு.க. பொதுக்கூட்டம்; எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு


சங்கரன்கோவிலில் இன்று அ.தி.மு.க. பொதுக்கூட்டம்; எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை அ.தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்காக அவர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு பிற்பகல் 12 மணியளவில் வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு, நெல்லை வழியாக சங்கரன்கோவிலுக்கு செல்கிறார். அவருக்கு தூத்துக்குடி, நெல்லை ேக.டி.சி. நகர், சங்கரன்கோவில் பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்க அந்தந்த மாவட்ட அ.தி.மு.க.வினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும் சங்கரன்கோவில்-சுரண்டை சாலையில் 18-ம் படி கருப்பசாமி கோவில் அருகே உள்ள மைதானத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருப்பதுடன் பொதுமக்கள் மழையில் நனையாத வண்ணம் தகரங்களை கொண்டு மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் நகரின் நான்கு எல்லைகளில் இருந்தும் சாலையோரங்களில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கட்சி கொடிகள் மற்றும் தோரணங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


Next Story