அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான வரவேற்பு பேனர்களில் ஓ.பன்னீர்செல்வம் படம் நீக்கம்


அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான வரவேற்பு பேனர்களில் ஓ.பன்னீர்செல்வம் படம் நீக்கம்
x

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான வரவேற்பு பேனர்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் நீக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழு கூட்ட மேடையை ஆய்வு செய்தபோது நத்தம் விஸ்வநாதன் கால் இடறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாகவும், வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் எனவும் அப்போதே அறிவிக்கப்பட்டது.

அதன்படி வானகரத்தில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை திருமண மண்டபத்தின் உள்ளே நடைபெறாமல் மண்டப வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன், கே.பி.முனுசாமி, பெஞ்சமின் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

தற்போது பொதுக்குழு நடக்கும் இடத்தில் மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் தரையில் இருந்து சுமார் 3 அடி உயரத்துக்கு மேடை போன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சர்கள் நடந்து சென்றபடி ஆய்வு செய்தபோது நத்தம் விஸ்வநாதன் திடீரென கால் இடறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெஞ்சமின் உள்ளிட்ட மற்றவர்கள் பதறியடித்தபடி அவரை தூக்கி விட்டனர். பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கடந்த முறை நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுப்பது போன்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான வரவேற்பு பேனர்களில் ஒரு பேனரில் கூட ஓ.பன்னீர்செல்வம் படம் இல்லாமல் அச்சடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தலைவர்களுக்காக பேனரில் ஒதுக்கப்பட்ட சிறிய, சிறிய இடங்களில் கூட ஓ.பன்னீர்செல்வம் படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story