அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க தீர்மானம்: பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகிறது


அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க தீர்மானம்: பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகிறது
x

சென்னையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜூலை 11-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சென்னை,

அ.தி.மு.க.வை புரட்டி போட்டிருக்கும் ஒற்றை தலைமை விவகாரத்தில் அக்கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான 'நமது அம்மா' பத்திரிகை நிறுவனர் என்ற பொறுப்பில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கான அறிவிப்பு அக்கட்சி தலைமை நிலைய செயலாளர் மூலம் விடுக்கப்பட்டிருந்தது. இதுவரை ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு வந்த நிலையில், முதன் முறையாக தலைமை நிலைய செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) என்ற பெயரில் அறிவிப்பு வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கினார். இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கோகுல இந்திரா, பா.வளர்மதி, தளவாய் சுந்தரம், செம்மலை, நத்தம் விஸ்வநாதன், மாதவரம் மூர்த்தி, தம்பிதுரை எம்.பி., முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மைத்ரேயன் உள்பட தலைமை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பொதுக்குழு கூட்டம் குறித்து

இந்த கூட்டத்தில் ஜூலை 11-ந் தேதி நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டம் குறித்தும், அக்கூட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விஷயங்கள் மற்றும் பணிகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. பொதுக்குழு நடக்கவிடாமல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எவ்வாறு சந்திப்பது? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பொதுக்குழு கூட்டத்தில் நிச்சயம் ஒற்றை தலைமை விவகாரம் முடிவு செய்யப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். அதன்படி பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கினார். இந்த தீர்மானங்களில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கும் தீர்மானமும் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உற்சாக வரவேற்பு

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் காலை 11.30 மணி அளவில் நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த எடப்பாடி பழனிசாமிக்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story