அ.தி.மு.க. அலுவலகத்தில் கலவரம்: மாவட்ட செயலாளர்களை கைது செய்யக்கூடாது -ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க. அலுவலகத்தில் கலவரம்: மாவட்ட செயலாளர்களை கைது செய்யக்கூடாது -ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை 11-ந்தேதி சென்னை வானரகத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினர் மீதும் ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், விருகை ரவி, அசோக் உள்ளிட்ட 37 பேர் சென்னை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு போலீஸ் தரப்பில் பதில் அளிக்க வேண்டும். அதுவரை மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.