சண்டையா...! சமாதானமா...! ஓ.பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமியுடன் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து ஆலோசனை


சண்டையா...! சமாதானமா...! ஓ.பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமியுடன் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து ஆலோசனை
x

ஓ.பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமியை அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்

சென்னை

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க.வில் எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் கலந்து ஆலோசித்தே முடிவுகளை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் எதிரொலித்தது. இரட்டை தலைமை இருப்பதால் கட்சி சார்ந்த முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து கூறிவந்தனர்.

கட்சியின் வளர்ச்சிக்கும் எதிர்கால நலனுக்கும் ஒற்றை தலைமையே சரியானதாக இருக்கும் என்கிற கருத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமைக்கு முன்நிறுத்தி அவரை தேர்வு செய்யவும் ஆதரவாளர்கள் திட்டமிட்டு காய் நகர்த்தினார்கள்.

சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை வந்தார். அவர் நேற்று மாலை சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிட தக்கது.

மாவட்ட செயலாளர்களை அணி சேர்ப்பதற்கு ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமி தரப்பு தனிதனியாக முயற்சிச் செய்து வருகின்றனர். சில மாவட்ட சென்னையில் நாளை மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து உள்ளனர். பல்வேறு மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர் செல்வமும்- எடப்பாடி பழன்சாமியும் இரண்டு பேரும் இணைந்து அழைத்தால் தான் வருவோம் என கூறி விட்டனர்.

நேற்று (ஜூன் 16) சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதிமுக பொதுச்செயலாளர் நீங்கள் தான் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

சரி, சேலம் தான் சொந்தஊர் என்பதால் கட்சியினர் எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு அளித்திருக்கலாம் என்று எடுத்துக்கொண்டாலும், இன்றும் அவர் சென்ற இடமெல்லாம் கட்சியினர் கூடி, மலர்களை தூவி ஆரவார வரவேற்பை கொடுத்துள்ளனர். இன்று திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவி வழங்குதல் என்ற பெயரில் கட்சியினரை எடப்பாடி சந்தித்துள்ளார். தனக்கு கிடைத்த உற்சாக வரவேற்பை பார்த்து அவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அவர் இன்று ஆரணி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை ஆகிய ஊர்களுக்கும் செல்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த பத்மாவதி தாயார் வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

இன்று சேலத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் எடப்பாடி வீட்டின் முன்பு குவிந்தனர்.

எடப்பாடி பழனிசாமியை இன்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில இளைஞரணி பாசறை செயலாளர் பரமசிவம், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அசோக் குமார், முன்னாள் அமைச்சர் மோகன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.


Next Story