அ.தி.மு.க. பிரமுகருக்கு தொடர்புடைய நிறுவனங்களில் 2-வது நாளாக சோதனை
கோவையில் அ.தி.மு.க. பிரமுகருக்கு தொடர்புடைய நிறுவனங்களில் 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.
கோவையில் அ.தி.மு.க. பிரமுகருக்கு தொடர்புடைய நிறுவனங்களில் 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக என்ஜினீயர் சந்திரசேகர் உள்ளார். நேற்று முன்தினம் இவருடைய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல் அவரது பெற்றோர், சகோதரர், சகோதரி வீடு, பீளமேட்டில் உள்ள கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைந்தது.
2-வது நாளாக சோதனை
கோவை பீளமேட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். மேலும் இங்கு நேற்று காலையிலும் தொடர்ந்து 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. இதுபோன்று அவருக்கு தொடர்புடைய மருதமலை, புலியகுளம் பகுதிகளில் உள்ள வீடு மற்றும் நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்தவர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சோதனையானது நேற்று காலை தொடங்கி இரவு வரை நீடித்தது.