அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்


அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
x

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூறினார்.

கன்னியாகுமரி

அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன், துணைச் செயலாளர் சுகுமாரன், மாநில இலக்கிய அணி இணைச்செயலாளர் சந்துரு, பகுதி செயலாளர்கள் ஸ்ரீலிஜா, முருகேஸ்வரன், ஜெயகோபால், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், ஜெஸீம், பொன் சுந்தரநாத், தினேஷ், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்றோஸ், குளச்சல் நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், அணி செயலாளர்கள் மனோகரன், அக்ஷயா கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நாகர்கோவிலில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். நாடாளுமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார். இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் நேரடியாக சென்று அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக முழுவதும் 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவடையும். 40 தொகுதிகளிலும் தேர்தல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆவினில் செய்த தவறை மீண்டும் மீண்டும் இந்த அரசு செய்து வருகிறது.

கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

அ.தி.மு.க.வினுடைய ஓட்டு வங்கி எவ்வளவு என்பதை நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்தியா கூட்டணியின் நோக்கம் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். நாங்கள் மக்களை நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story