எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தெருநாய்கள் கருத்தடை தீர்மானத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தெருநாய்கள் கருத்தடை தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி:
நகராட்சி கூட்டம்
எடப்பாடி நகராட்சி கூட்டம் தலைவர் டி.எஸ்.எம். பாஷா தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் முஸ்தபா முன்னிலை வகித்தனர். நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமிக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை எனக்கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவும், அதற்கு பிந்தைய பராமரிப்பு செலவினங்களுக்கு அனுமதி கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் ஏ.எம்.முருகன் பேசினார். அப்போது, தெருநாய்களுக்கு அதிக ெதாகை செலவு செய்வதை விட தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
14 தீர்மானங்கள்
அதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி தலைவர் டி.எஸ்.எம்.பாஷா, புதிய தெருவிளக்குகள் அமைக்க ரூ.4½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்விளக்குகள் அமைக்கப்படும். புதிதாக மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.