அ.தி.மு.க. யாருக்கு? - தீவிரம் அடையும் மோதல்! தேர்தல் ஆணையம் வைத்த 'திடீர்' டுவிஸ்ட்! எடப்பாடி கையில் அ.தி.மு.க...?


அ.தி.மு.க. யாருக்கு? - தீவிரம் அடையும் மோதல்!  தேர்தல் ஆணையம் வைத்த திடீர் டுவிஸ்ட்! எடப்பாடி கையில் அ.தி.மு.க...?
x

2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு சமர்ப்பித்த கணக்குகள் ஏற்கபட்டது.

சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல சோதனைகளை கண்டது. தற்போது அந்த கட்சி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தலைமையில் 4 ஆக பிரிந்துள்ளது.

இதில் டி.டி.வி.தினகரன் மட்டும் அ.ம.மு.க. என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நீடிப்பதாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. இதில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியது. மூத்த நிர்வாகிகள் பலரும், பெரும்பாலான முன்னாள் அமைச்சர்களும், பல எம்.எல்.ஏ.க்களும் அவருக்கே ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

எனவே 2 முறை பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதோடு உறுப்பினர்களின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராகவும் ஆனார். ஒரு புறம் ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாக தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கினார். மேலும் தனது பங்குக்கு புதிய பொறுப்பாளர்களையும் நியமித்தார்.

அதிமுக பொதுக்குழுவில் வரவு- செலவு கணக்கை அமைப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். வழக்கமாக பொருளாளர் மட்டுமே வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வார். ஆனால், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வராத நிலையில் அமைப்புச் செயலாளரான விஜயபாஸ்கர் அதனை தாக்கல் செய்தார். பின்னர் கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

பொதுக்குழு தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது. அதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் பல்வேறு மனுக்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது.

2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு சமர்ப்பித்த கணக்குகள் ஏற்கபட்டது.

அதிமுக பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், தற்போது வரவு செலவு அறிக்கையை ஏற்றுக்கொண்டு இணையதளத்தில் பதிவேற்றியுள்ளதால், எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.




Next Story