கரூர் அருகே கார் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி
கரூர் அருகே கார் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலியானார். மேலும் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
அ.தி.மு.க. பிரமுகர்
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் ஏ.பி. நகரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் தீரன்கோபால் (வயது 34) பரிதாபமாக இறந்தார். இவர் உப்பிடமங்கலம் பேரூராட்சி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக பதவி வகித்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.
இந்தநிலையில் தீரன்கோபால், செந்தில்குமார் ஆகிய 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் மதியம் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏ.பி. நகருக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தீரன்கோபால் ஓட்டினார். செந்தில்குமார் பின்னால் அமர்ந்து சென்றார்.
பலி
கரூர் ஏமூர் பகுதி குன்னனூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற காரின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் தவறி சாலையில் விழுந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார் சாலையில் கிடந்த 2 பேரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தீரன்கோபால் பரிதாபமாக இறந்தார். செந்தில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.