சட்டசபை கூட்டத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு


சட்டசபை கூட்டத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
x

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்ததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

சென்னை,

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அ.தி.மு.க.வில் யாருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை? என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

சட்டசபை அரங்கத்துக்கு காலை 9.57 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து 9.58 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பு

அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவையை புறக்கணித்தனர். அமைச்சர்கள் வரிசையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூட்டத்துக்கு வரவில்லை.

சரியாக காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது. முதலாவதாக, சபாநாயகர் மு.அப்பாவு திருக்குறள் ஒன்றை வாசித்து அதற்கான விளக்கத்தை கூறினார். அதனைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் அ.மு.அமீது இப்ராகிம், கே.கே.வீரப்பன், ஏ.எம்.ராஜா, எஸ்.பி.பச்சையப்பன், எஸ்.புருஷோத்தமன், பெ.சு.திருவேங்கடம், தே.ஜனார்த்தனன், பே.தர்மலிங்கம், எம்.ஏ.ஹக்கீம், கோவை தங்கம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைவரும் எழுந்து நின்று 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

இரங்கல் தீர்மானம்

அதன்பின்னர், ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர குமரன் சேதுபதி, இந்திய விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் துன் எஸ்.சாமிவேலு, கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அவர் 1977-1980, 1980-1984, 1985-1988, 1991-1996 ஆகிய ஆண்டுகளில் சேடபட்டி தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், 1991-1996-ம் ஆண்டு சபாநாயகர் பதவியையும் வகித்துள்ளார். மேலும், 1998-ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மத்திய மந்திரியாகவும் இருந்தார்.

அவை ஒத்திவைப்பு

சேடபட்டி முத்தையா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், சபாநாயகர் மு.அப்பாவு அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, நேற்றைய கூட்டம் நிறைவடைந்தது. அதாவது, காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 10.11 மணிக்கு முடிவடைந்தது.


Next Story