7 ஆண்டுகள் இளம்பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்த வாலிபர்
7 ஆண்டுகள் இளம்பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்த வாலிபர்
கோவை
கோவையில் 7 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவையை சேர்ந்த 26 வயதான இளம்பெண் கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார்மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஒன்றாக வாழ்ந்தோம்
நான் கோவையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கணக்காளராக வேலை செய்து வருகிறேன். நான் கல்லூரியில் படித்தபோது, வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அப்போது திருவாரூர் மாவட்டம் ஹரிதுவாரமங்கலத்தை சேர்ந்த அரவிந்த் (26) என்பவர் இந்த முகாமில் கலந்து கொண்டார். அப்போது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
சிற்பியாக வேலை செய்து வந்த அவர் அடிக்கடி கோவை வந்து சென்றார். இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். அப்போது என்னை திருமணம் செய்து கொள்ளும்படி நான் கூறினேன். அதற்கு அவர் எனது வீட்டில் சம்மதம் தெரிவித்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.
திருமணம் செய்யவில்லை
பின்னர் சில மாதம் கழித்து மீண்டும் எனது கழுத்தில் தாலி கட்ட சொன்னேன். அதற்கும் அவர் அதே பதிலைத்தான் கூறினார். இதையடுத்து நான் எனது உறவினருடன் அரவிந்த் சொந்த ஊருக்கு சென்று அவரின் பெற்றோரை சந்தித்து பேசினோம். அதற்கு அவர்கள் விரைவில் நாங்களே திருமணம் செய்து வைப்பதாக கூறினார்கள். ஆனால் திருமணம் செய்து வைக்கவில்லை.
இதன் பின்னரும் நாங்கள் தொடர்ந்து ஒன்றாகதான் வாழ்ந்து வந்தோம். அவர் திருவாரூரில் வேலை செய்து வந்தாலும் அடிக்கடி கோவை வந்து சென்றார். அப்போது பலமுறை அவரிடம் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை.
போலீஸ் வலைவீச்சு
இந்த நிலையில் பெற்றோரை பார்த்து வருகிறேன் என்று கூறி சென்றவர் என்னை பார்க்க வரவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் நேரில் சென்று அரவிந்த்தின் பெற்றோரை சந்தித்து பேசினாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே என்னுடன் 7 வருடம் ஒன்றாக வாழ்ந்துவிட்டு என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கும் அரவிந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து அரவிந்த் மீது ஏமாற்றுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவாகிவிட்ட அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
-------------------