கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம்:
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் கடைபிடித்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக ஏசு, சிலுவையில் அறையப்பட்டு அவர் இறந்த நாளை புனித வெள்ளியாக கடைபிடித்து வருகின்றனர்.
அதன்படி நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.ஐ., தூய பேதுரு ஆலயம், தூயபவுல் ஆலயம், தூய ஜேம்ஸ் ஆலயம், டி.இ.எல்.சி., ஏ.எல்.சி., மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
சிறப்பு பிரார்த்தனை
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியார் ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிலுவையை சுமந்தபடி ஏசுவின் பாடுகளை அனுசரித்தனர். தொடர்ந்து, ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையிலும் கலந்துகொண்டனர். முடிவில் திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
இதேபோல் செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, ஒரத்தூர், முட்டத்தூர், முகையூர், கக்கனூர், கஞ்சனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புனிதவெள்ளி கடைபிடிக்கப்பட்டது.
இதில் சிலுவையில் ஏசுநாதர் அறையப்பட்டபோது அவர் பேசிய 7 வார்த்தைகளை சொல்லி கிறிஸ்தவர்கள் தியானம் செய்தனர். மேலும் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் ஏசுபிரான் மறைவை நினைவுப்படுத்தும் சிலுவைப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.
செஞ்சி, விக்கிரவாண்டி
செஞ்சி புனிதமிக்க ஆலயம், கண்மலை கிறிஸ்தவ ஆலயம், ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், வேலந்தாங்கல், பாடிப்பள்ளம், விக்கிரவாண்டி புனித சகாய அன்னை ஆலயம், ஒரத்துார், கஞ்சனூர் முட்டத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.