உறவினர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; பூசாரிக்கு 10 இடங்களில் கத்திக்குத்து


உறவினர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; பூசாரிக்கு 10 இடங்களில் கத்திக்குத்து
x

சிதம்பரத்தில் உறவினர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பூசாரியை 10 இடங்களில் கத்தியால் குத்திய மனைவி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

கடலூர்

சிதம்பரம்,

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சரமாரி கத்திக்குத்து

சிதம்பரம் அப்பாபிள்ளைசந்தை சேர்ந்தவர் சுவாமிநாதன்(வயது 34). இவர், பாம்பன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவருடைய மனைவி சுதா(வயசு 32).

இந்த தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுவாமிநாதன் நேற்று காலையில் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி சுதா திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுவாமிநாதனை சரமாரியாக குத்தினார். இதில் அவரது உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

போலீசில் மனைவி சரண்

ரத்தம் பீறிட்டு வெளியேறியது. வலியால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, சுவாமிநாதனை மீட்டு சிகிச்சைக்காக அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கையில் ரத்தக்கறையுடன் சுதா, சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது அவர், தனது கணவரை கத்தியால் குத்திவிட்டதாக கூறி கதறி அழுதார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை ஆசுவாசப்படுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

உறவினர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு

விசாரணையில், சுவாமிநாதனுக்கு பக்கத்து தெருவில் வசித்து வரும் உறவினர் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை சுதா கண்டித்தும், சுவாமிநாதன் கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சுதா, தனது கணவரை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து சிதம்பர நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story