சர்க்கரை ஆலைகளின் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.63 கோடி முன்பணம் -அரசு உத்தரவு


சர்க்கரை ஆலைகளின் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.63 கோடி முன்பணம் -அரசு உத்தரவு
x

சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க எந்திரம் பழுது, பராமரிப்பு பணிகளுக்கு ரூ.63 கோடியே 61 லட்சம் முன்பண வழிவகை கடன் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில், கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக, கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு கரும்பு சாகுபடியினை அதிகரிப்பதற்காக, முதல்-அமைச்சரின் ஆணையின்பேரில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்பூர், தேசிய மற்றும் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு பற்றாக்குறையின் காரணமாக ஆலையின் அரவை இயங்காமல் இருந்து வருகிறது. மேற்கண்ட ஆலைகளில் பணிபுரிந்த விருப்பமுள்ள பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிற கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு அயற்பணியில் பணிபுரிய ஆணையிடப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ரூ.63 கோடி முன்பணம்

இந்த சூழ்நிலையில், மேற்கண்ட சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்த காலத்திற்குரிய சம்பளம் நிலுவை மற்றும் இதர சட்டப்பூர்வ நிலுவைத்தொகையை வழங்குமாறு தொடர்ச்சியாக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணையுடன் பரிசீலனை செய்து மேற்கண்ட 3 சர்க்கரை ஆலைகளுக்கு முன்பண வழிவகை கடனாக ரூ.21 கோடியே 47 லட்சம் வழங்கி ஆணையிட்டுள்ளார்.

மேலும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்க அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கும், எம்.ஆர்.கே, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு எந்திர பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு பண மூலதன தொகைக்கு முன்பண வழிவகைக் கடனாக ரூ.42 கோடியே 14 லட்சம் வழங்கி ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் மேற்கண்ட சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் வரும் பருவத்தில் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story