பெரம்பலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் விளம்பர பதாகைகள்
பெரம்பலூரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கும் நபர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்துள்ளனர்.
விளம்பர பதாகைகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முறையாக முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதி பெறாமல் பதாகைகள் வைக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள், விளம்பர பதாகை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை விடுத்து ஏற்கனவே அறிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் கலெக்டரின் அறிவிப்பு பெரம்பலூர் நகர்ப்பகுதியில் காற்றில் பறக்கவிடப்பட்டு முறையாக பின்பற்றப்படுவதில்லை. பெரம்பலூர் நகர்ப்பகுதியில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கும் கலாசாரம் தலை தூக்கி உள்ளது.
கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா, ஆன்மிக விழா போன்ற நிகழ்ச்சிகளின் விளம்பர பதாகைகளும், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விளம்பர பதாகைகளும், துக்க காரியம் போன்றவைக்கும் அனுமதியின்றி வைக்கப்படுகிறது. இதனை நகராட்சி நிர்வாகமும் கண்டும், காணாதது போல் நடவடிக்கை எடுக்காமல் சென்று விடுகிறது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் நுழைவு பகுதிகளிலும், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் பாலக்கரை ரவுண்டானா, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் தினமும் வைக்கப்படுகிறது.
இவ்வாறு அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகள் நிகழ்ச்சி முடிந்த பிறகு மறுநாள் உடனடியாக எடுக்கப்படாமல் சில நாட்கள் அப்படியே இருக்கிறது. மேலும் அருகே உள்ள மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் பெரம்பலூரில் விளம்பர பதாகைகள் வைக்கப்படும் நிகழ்வு அவ்வவ்போது அரங்கேறி வருகிறது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
தற்போது ஆடி மாதம் காற்று காலம் என்பதால் விளம்பர பதாகைகள் காற்றில் சாய்ந்து கீழே விழுகின்றன. போக்குவரத்து நிறைந்த பகுதியில் வாகனங்கள், வாகன ஓட்டிகள், பாதாசாரிகள் மீது சாய்ந்து விழும் நிலையில் விளம்பர பதாகைகள் உள்ளன. நகராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் பேனர் வைக்க அனுமதியில்லை என்று வைத்திருக்கும் அறிவிப்பு பலகை முன்பாக ஒரு அரசியல் கட்சியினர் விளம்பர பதாகை வைத்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் அந்த விளம்பர பதாகை வைத்தவர் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் தற்போது நகரின் தெரு பெயர் பலகைகளை மறைத்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் நகருக்கு புதிதாக வருபவர்கள் தாங்கள் செல்லும் தெருவினை கண்டுபிடிப்பதற்குள் படாதபாடுபடுகின்றனர். எனவே பெரம்பலூர் நகர்ப்பகுதியில் உரிய அனுமதி பெறாமல் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றவும், இனிமேல் உரிய அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீதும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.