சேலத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி. திடீர் ஆலோசனை மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை
சேலத்தில் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி. திடீர் ஆலோசனை செய்தார்.
சேலம்
சேலத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருண் திடீரென ஆலோசனை நடத்தினார். இதில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருண் நேற்று சேலம் லைன்மேட்டில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது அவர் அங்கு நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் புகைப்படத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
மன அழுத்தம்
இந்த கூட்டத்தில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டுகள் சிவக்குமார் (சேலம்), ஸ்டீபன் ஜேசுபாதம் (தர்மபுரி), ராஜேஷ்கண்ணன் (நாமக்கல்), சரோஜ்குமார் தாகூர் (கிருஷ்ணகிரி), சேலம் மாநகர துணை கமிஷனர் லாவண்யா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் நிலுவையில் உள்ள மற்றும் சாராயம் தொடர்பான வழக்குகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கூடுதல் டி.ஜி.பி. கேட்டறிந்தார். பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கோவையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போல் இனிமேல் நடைபெற கூடாது. எனவே போலீஸ் அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் டி.ஜி.பி. அருண் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் தங்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.