தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்தி விருப்பமான துறைகளில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் கலெக்டர் சரயு அறிவுரை
கிருஷ்ணகிரி:
தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் வெற்றி பெற வேண்டும் என்று கலெக்டர் சரயு கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிகல்வித்துறை சார்பாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பு சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்வதற்கான உயர்வுக்கு என்ற படி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் சரயு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் உயர் கல்வியை தேர்வு செய்வது குறித்தும், உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவர்கள் செல்போனை பார்த்து நேரத்தை வீணாக்க கூடாது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளில் வெற்றிபெற மாவட்ட நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து தரும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும்.
வெற்றிபெற வேண்டும்
உயர்கல்வி படிக்க வசதியில்லாத மாணவ, மாணவிகளின் உயர்கல்வி தொடர அலுவலர்கள் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உயர்கல்வி படிக்க வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான கல்வி கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மாணவர்கள் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான துறையில் வெற்றிபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயணி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, கோவை பாரதியார் பல்கலைக்கழக தொழில்நெறி வழிகாட்டுனர் விஸ்வகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் 870 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாணவ, மாணவிகளின் உயர்கல்வி குறித்து பல்வேறு கேள்விகளுக்கு கலெக்டர் பதில் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சிவகாந்தி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிமேகலை, இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் பன்னீர்செல்வம், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ராஜீவ்காந்தி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.