காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அவதூறு வழக்கில் சுமார் 24 நாட்களில், ராகுல் காந்தி எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உடனடியாக அவரின் எம்.பி பதவி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டது. இது பா.ஜ.க.வின் எதிர்க்கட்சிகளை நசுக்கும் போக்கை காட்டுகிறது. ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து, பொதுமக்களுக்கு எடுத்து கூறுவதற்காக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். வருகிற 15-ந் தேதி தமிழகத்தில் மாவட்டம் தோறும் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும். இம்மாதம் இறுதியில் சென்னையில் லட்சக்கணக்கான பொதுமக்களை திரட்டி, மிகப் பெரிய சத்தியாகிரக போராட்டத்தை நடத்திட உள்ளோம். தமிழ்நாடு மக்களுக்கு உணவளிக்கும் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதை, காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. அப்படி திட்டம் இருப்பின் மத்திய அரசு அதை கைவிட வேண்டும். மீறி சுரங்கம் அமைக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி தீவிர போராட்டங்களில் ஈடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், சீனிவாசன், நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story