ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
தமிழகம் முழுவதும் அனைத்து கிராமப்பகுதிகள் மற்றும் நகராட்சிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விரிவாக்கம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 541 பள்ளிகளில் படிக்கும் 34 ஆயிரத்து 702 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இத்திட்ட தொடக்க விழாவை ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக நடத்துவது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி முன்னிலை வகித்தனர். கட்டத்தில் காலை உணவுத் திட்டத்தை ஒரு திருவிழாவாக கொண்டாட வேண்டும். இதற்கு ஊராட்சிமன்ற தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். தொடக்க நாளில் பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவைக்கலாம். அவர்கள் முன்னிலையில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினால் நன்றாக இருக்கும் போன்ற பல்வேறு ஆலோசனைகள் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, மாதனூர்ர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.






