4-வது மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்துக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்ட எந்திரங்கள் தயார்; இம்மாத இறுதியில் பணிகள் தொடக்கம்


4-வது மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்துக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்ட எந்திரங்கள் தயார்; இம்மாத இறுதியில் பணிகள் தொடக்கம்
x

மெட்ரோ ரெயில் சேவைக்காக கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கம் தோண்டுவதற்காக 2 டணல் போரிங் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இம்மாத இறுதியில் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்குகிறது.

அடையாறு ஆற்றில் சுரங்கப்பாதை

சென்னையில் முதல் கட்டத்தை தொடர்ந்து தற்போது போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக, மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் வரை 3-வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. வரை 4-வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்திற்கு 5-வது வழிப்பாதை உள்பட 3 வழிப்பாதைகளில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. வரை 4-வது வழிப்பாதையில் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ ரெயில் நிலையம் செல்வதற்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

இதற்காக கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரெயில் நிலையம் அமைய உள்ள பகுதியில் சுரங்க ரெயில் நிலையத்துக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. இதேபோல் அடையாறு ஆற்றில் 6 மீட்டர் தண்ணீர் ஓடும் நிலையில், மிதவை படகில் எந்திரங்கள் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண்பரிசோதனை செய்யும் பணியும் நிறைவடைந்து உள்ளது.

சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் வருகை

இந்தநிலையில் கிரீன்வேஸ் சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைய உள்ள பூங்காவில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதை தான் அடையாறு ஆற்றின் கீழ் அமைகிறது. இதற்காக 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் மிஷின்) கொண்டு வரப்பட்டு உள்ளது. சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பொருத்தும் பணி ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது. அதற்கு பிறகு இம்மாத இறுதியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

அடையாறு ஆற்றுக்கு கீழ் ராட்சத டணல் போரிங் எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணி நடக்கும்போது, எந்திரத்தின் மேற்பரப்பிற்கு எதிராக மண்ணை பிடித்து அழுத்தம் கொடுக்கும். மணலின் உறுதி தன்மையை அதிகரிக்க ரசாயனம் கலந்த கலவை செலுத்தப்பட உள்ளது. எந்திரம் முன்னோக்கி நகரும்போது மிக உறுதியான கான்கிரீட் குழாய்களும் பதிக்கப்படுகிறது. சுரங்கப்பாதை அமைக்கும்போது ஆற்றுப்படுகை அப்படியே பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பணியின்போது ஆற்றுப்படுகையின் மாற்றங்களும் கண்காணிக்கப்படும்.

என்னென்ன நுட்பங்கள் பின்பற்றப்படும்

பொதுவாக, பூமிக்கடியில் ஈரப்பதம் பெரியளவில் இருக்கும் என்பதால், நிலத்தடியில் பாதை அமைக்கும்போது முதலில் 'கேசிங்' வகை குழாய்களை பூமிக்கடியில் சொருகி, அதன் வழியாக மண் தூர்வாரப்பட்டு, பின்னர் தூண்கள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு தூண் அமைய உள்ள பகுதியில், 4-க்கும் மேற்பட்ட 'கேசிங்' வகை குழாய்கள் பூமிக்கடியில் சொருகி பணிகளை மேற்கொள்வோம். பொதுவாக தூண்கள் அமைக்கும் பணி, 'என்ட் பியரிங்', 'பிரிக்சன்', 'ஓபன் பவுண்டேஷன்' ஆகிய 3 முறைகளில் அமைக்கப்படுகின்றன.

பூமிக்கடியில் மண் சரியாமல், ஸ்திரத்தன்மை உள்ள இடம் வரை, ஆழம் தோண்டப்பட்டு, 'பிரிக்சன்' முறையில் தூண்கள் அமைக்கப்படுகின்றன. சில இடங்களில், குறிப்பிட்ட அடி ஆழத்திற்கு கீழே கற்கள் இருக்கும் பட்சத்தில், அங்கு, 'என்ட் பியரிங்' என்ற முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் தற்போது செய்யப்பட்ட மண் ஆய்வில் கற்கள் இல்லை என்று தான் தெரியவந்து உள்ளது. மற்ற சில இடங்களில் குறைந்த ஆழத்திலேயே, பக்கவாட்டில் தூண்களின் அடித்தளத்திற்கு பலத்தை அதிகரிக்கும் வகையில், 'ஓபன் பவுண்டேஷன்' என்ற முறையில் தூண்கள் கூவம் ஆற்றில் சுரங்கம் தோண்டும்போது இந்த முறையில் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து இதேபோன்றும், மேலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் யுக்திகள் பயன்படுத்தி அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டப்படும். சவாலான இந்த பணியை இம்மாத இறுதியில் தொடங்கி திறம்பட திட்டமிட்ட காலத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணி திட்டமிட்டப்படி வருகிற 2026-ம் ஆண்டு நிறைவடைந்த உடன், அடையாறு ஆற்றின் கீழ் பயணிகள் 'திரில்' பயணம் செய்யலாம்.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.


Next Story