13 ஆண்டுகளுக்கு பிறகு சேஷசமுத்திரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்


13 ஆண்டுகளுக்கு பிறகு சேஷசமுத்திரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

13 ஆண்டுகளுக்கு பிறகு சேஷசமுத்திரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம், .

13 ஆண்டுகளுக்கு பிறகு

சங்கராபுரம் அருகே சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இ்க்கோவிலில் கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு தேர்திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இரவில் சாமி வீதி உலா, பால்குடம் எடுத்தல், காளியம்மன் வேடமணிந்து நடனம், காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாணம், மாரியம்மன், திரவுபதி அம்மனுக்கு ஊரணி பொங்கல், கழுமரம் ஏறுதல், காளிகோட்டை இடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு காலையில் பால், தயிர், இளநீர், பன்னீர் சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தேரோட்டம்

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். விழாவில் சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதயசூரியன் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேரை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நிலையை வந்தடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இதில் ஒன்றியக்குழு தலைவர் திலகவதிநாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் தனவேல், தொழிலதிபர் ஆறுகதிரவன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story