2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டியது
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டியது. இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
சென்னை,
இந்துக்கள் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடினாலும், முழுமுதற் கடவுளாகிய விநாயக பெருமானின் சதுர்த்தி கொண்டாட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அதன்படி விநாயகர் சதுர்த்தி விழா நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னையில் பல்வேறு அவதாரங்களில் காட்சியளிக்கும் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவை படையல் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனை முகத்தோனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்தி விழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. 2 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று களை கட்டியது.
1 லட்சம் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் மட்டும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 600 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு குழுக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சிவன்-பார்வதி மடியில் அமர்ந்து இருப்பது, எலி வாகனத்தில் எழுந்தருளுவது, விஷ்ணு அவதாரத்தில் தோன்றுவது, மயில் வாகனத்தில் அமர்ந்திருத்தல், கொரோனா தடுப்பூசி மீது அமர்ந்திருத்தல், இசை கருவிகளை வாசித்தல், போலீஸ், ராணுவ வீரர் தோற்றம் என பல்வேறு அவதாரங்களில் கலைஞர்களின் ரசனைகளுக்கு ஏற்ப விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
'ஸ்ரீ அக்னிபத்' விநாயகர்
ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமான அந்த ஆண்டின் சிறப்பான கதாபாத்திரங்களை மையமாக கொண்டு விநாயகர் சிலைகள் வடிவமைப்பு செய்வது கலைஞர்களின் வழக்கம். அந்தவகையில், சென்னை வளசரவாக்கத்தில் 'ஸ்ரீ அக்னிபத்' விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராணுவ சீருடையில், ஏ.கே.-47 ரக துப்பாக்கியுடன் குன்றின் மீது எழுந்தருளிய விநாயகர், அந்த பகுதியில் உள்ளவர்களின் கண்களுக்கு விருந்தளிக்க தவறவில்லை.
திரு.வி.க.நகர் கென்னடி சதுக்கத்தில் அண்ணாச்சி பழங்களால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை, திருவல்லிக்கேணியில் விநாயகரும், அவருடைய சகோதரன் முருகனும் செஸ் காய்களை நகர்த்துவது போன்றும், பார்த்தசாரதி கோவில் அருகே பெருமாள் கோலத்தில் செல்வ விநாயகர் யானையின் நெற்றியின் மீது நின்றவாறு தோன்றும் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
கலர் பென்சில்களால்....
கொளத்தூர் பூம்புகார் நகரில் 3 ஆயிரத்து 600 கலச தேங்காய்களுடன் 40 அடி உயரத்தில் பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மணலி சின்னசேக்காடு காந்திநகரில் 35 ஆயிரம் கலர் பென்சில்கள் மற்றும் 800 ஜாமென்ட்ரி பாக்ஸ்கள் மூலம் 18 அடி உயரத்தில் புத்தகம் படிக்கும் விநாயகர் சிலையும், மணலி புதுநகரில் இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் வாழைப்பூக்களால் 15 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலையின் கிரீடம் அண்ணாச்சி பழத்திலும், காதுகள் வெள்ளை கரும்பு போன்றவைகளை கொண்டும் செய்யப்பட்டு உள்ளது.
திருவொற்றியூர் தேரடியில் 7 அடி உயரத்தில் 21 ஆயிரம் ருத்ராட்சங்கள், மூங்கில் கொம்பு, குச்சிகள், தேங்காய் நார் மற்றும் 101 வலம்புரி சங்குகள் கொண்டு சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர ருத்ராட்ச விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
செஸ் விளையாடும் விநாயகர்
மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்துக்கு பெருமையை தேடித்தந்தது. அதனை நினைவுகூறும் வகையில் மதுரவாயல் மார்க்கெட் பகுதியில் சிவன்-பார்வதி முன்னிலையில், அவர்களின் பிள்ளைகளான விநாயகர் மற்றும் முருகன் ஆகியோர் செஸ் விளையாடுவது போன்று தத்ரூபமாக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் பசு வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர் சிலையும், புதுப்பேட்டையில் கருட வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர் சிலையும், தந்தையாரான சிவபெருமான் வேடத்தில் பசு வாகனத்தில் விநாயகர் சிலையும், பெரம்பூர் பேப்பர்மில்ஸ் சாலையில் தர்ப்பூசணியால் வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
களிமண் விநாயகர்
இதேபோல பொதுமக்களும் தங்களுடைய வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றனர்.
பழைய வண்ணாரப்பேட்டை கப்பல்போலு தெருவில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவிலில் நடந்த விழாவில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மூலம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் நடிகர் கே.ஆர்.சுரேஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் கே.ராஜன், ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன் உள்ளிட்டோர் வேட்டி-சேலை வழங்கினர்.
கோயம்பேட்டில் உள்ள தனது குடியிருப்பு வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள் மூன்று முகம் கொண்ட விநாயகர் சிலையை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது குடும்பத்தினரோடு வழிபட்டார்.
4-ந் தேதி கரைப்பு
பிரதிஷ்டை செய்து, வழிபட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கடல், ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் பிரியா விடை கொடுப்பது வழக்கம். விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும் விசர்ஜன விழா வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நடைபெற உள்ளது. சென்னையில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 4-ந்தேதி நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
சென்னையில் விநாயகர் சிலைகளை பாலவாக்கம், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரைகளில் மட்டுமே கரைக்கவேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தி பண்டிகை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தின்போதும் ஒவ்வொரு வாகனத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.