திருமணமான 6 மாதத்தில் மனைவிக்கு வேறொருவருடன் பழக்கம்: கள்ளக்காதலை கண்டித்த புதுமாப்பிள்ளை மர்ம சாவு வேப்பூர் அருகே பரபரப்பு

வேப்பூர் அருகே திருமணமான 6 மாதத்தில் மனைவிக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதலை கண்டித்த புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தார்.
ராமநத்தம்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மகன் ரமேஷ்(வயது 29). இவர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ரமேஷ் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கும், அதே ஊரை சேர்ந்த கதிர்வேல் மகள் பவித்ரா(23) என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 2 மாதத்திற்கு பிறகு ரமேஷ் மட்டும் மீண்டும் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் பவித்ராவிற்கு, கழுதூரை சேர்ந்த ராமகோபாலன்(27) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று பேசி பழகி வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பவித்ரா ராமகோபாலனோடு வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
தகராறு
இதுபற்றி அறிந்த ரமேஷ், அரியநாச்சி கிராமத்திற்கு வந்தார். தனது கணவர் வந்ததை அறிந்த பவித்ரா, 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது ரமேஷ், பவித்ராவிடம், இவ்வளவு நாட்கள் எங்கு சென்றிருந்தாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது தோழிகளுடன், சென்னையில் வேலை தேடுவதற்காக சென்றிருந்ததாக கூறினார். இதையடுத்து ரமேசும், பவித்ராவும் வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பவித்ரா, ரமேசிடம் வேப்பூர் சென்று துணி எடுத்து விட்டு வரலாம் என்று கூறி அவரை அழைத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் பவித்ரா, தனது கள்ளக்காதலன் ராமகோபாலனையும் வேப்பூருக்கு வரச்சொல்லி உள்ளார். பின்னர் இருவரும் வேப்பூர் கடை தெருவில் வைத்து பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதைபார்த்த ரமேஷ், கள்ளக்காதலை கண்டித்ததோடு ராமகோபாலனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி அறிந்த வேப்பூர் போலீசார், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தூக்கில் பிணம்
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு ரமேஷ் வீட்டைவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். அப்போது பெரியநெசலூரில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த மரத்தில் ரமேஷ், மர்மமான முறையில் பிணமாக தொங்கினார். இதுபற்றி அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






