ஆற்றை சூழ்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள்


ஆற்றை சூழ்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள்
x

கூத்தாநல்லூர் அருகே அதிவீரராமன் ஆற்றை சூழ்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே அதிவீரராமன் ஆற்றை சூழ்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிவீரராமன் ஆறு

கூத்தாநல்லூர் அருகே உள்ள, பண்டுதக்குடியில் இருந்து செல்லக்கூடிய வெண்ணாற்றில் இருந்து தனியாக பிரிந்து அதிவீரராமன் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீரை பெரியகுருவாடி, தண்ணீர்குன்னம், பழைய காக்கையாடி, பள்ளிவர்த்தி, பூதமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பாசன வாய்க்கால் வழியாக வயல்களுக்கு தண்ணீரை பாய்ச்சி, ஆண்டுதோறும் நெல், உளுந்து, பயறு மற்றும் பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சில ஆறுகளில் பரவலாக சென்றபோதிலும், அதிவீரராமன் ஆற்றில் 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.

விவசாய பணிகள் பாதிப்பு

இதற்கு ஆகாயத்தாமரை செடிகள் காய்ந்து போய் ஆற்றில் குவியல் குவியலாக கிடந்ததுதான் காரணம் என்று அப்பகுதி விவசாயிகள் கூறினர். ஆனால், ஆற்றில் அதன் பிறகு தண்ணீர் சென்றபோது, ஆகாய தாமரை செடிகளும் ஆற்றில் அடித்து செல்வது போல காணப்பட்டது. இருப்பினும் ஆற்றங்கரையோரங்களில் ஆகாய தாமரை செடிகள் ஓரமாக குவிந்தே கிடந்துள்ளது.தற்போது, பண்டுதக்குடியில் அதிவீரராமன் ஆற்றின் முகப்பு பகுதியிலேயே ஆகாய தாமரை செடிகள் சூழ்ந்து முகப்பிலேயே ஆற்றுத் தண்ணீரை தடுப்பது போல சூழ்ந்து உள்ளது. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வரக்கூடிய தண்ணீரையும் தடுத்து நிறுத்தும் வகையில் ஆகாய தாமரை செடிகள் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிவீரராமன் ஆற்றில் சூழ்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story