விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்
உடுமலை மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமை வகித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மலை அடிவாரப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறியதாவது:-
வளையபாளையம் பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அவை தென்னை மரங்களில் இளநீர் பதத்தில் உள்ள காய்களை பறித்து சேதப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரையில் ஏராளமான தேங்காய்கள் வீணாகி உள்ளது. அதற்கு கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்று அதிகாரி தெரித்தார்.மேலும் காண்டூர் கால்வாய் அருகே வீட்டு மனை இடங்கள் கொடுப்பதற்காக மணல் பாங்கான மலைக்குன்று ஒன்றில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அந்த பணி கைவிடப்பட்டது. அடிவார பகுதியில் வனவிலங்குகள் தங்கும் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டதால் மான் காட்டுப்பன்றி உள்ளிட்டவை விளைநிலங்களுக்கு புகுந்து வருகிறது.அதை தடுப்பதற்கும் தூய்மைப்படுத்திய நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மேலும் காண்டூர் கால்வாயின் குறுக்காக கட்டப்பட்டுள்ள உபயோகம் இல்லாத பாலத்தின் வழியாக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வருகிறது.
இதனால் அந்தப் பாலத்தை அடைத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.இது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி வனப்பாதுகாவலர் தெரிவித்தார்.