கம்பத்தில் பரபரப்பு: கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றி சென்ற லாரிகளை கணக்கெடுத்த பா.ஜ.க.வினர்

கம்பத்தில் கம்பம்மெட்டு சாலையில் கேரளாவிற்கு கனிம வளம் ஏற்றி சென்ற லாரிகளை பா.ஜ.க.வினர் கணக்கெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பத்தில் கம்பம்மெட்டு சாலை வழியாக தினந்தோறும் 200-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கல், மண், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் அனுமதியின்றி கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் இன்று கம்பம்மெட்டு புறவழிச்சாலையில் மாநில பா.ஜ.க. விவசாய அணி செயலாளர் ராஜா, பொறுப்பாளர் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட தலைவர் தென்றல் சரவணன் மற்றும் விவசாய அணியினர் நின்று கொண்டு அனுமதியின்றியும், பாதுகாப்பற்ற முறையிலும் கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் பா.ஜ.க.வினரிடம் வருவாய்த்துறை, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு துறை அதிகாரிகள் தவிர தனி நபர்கள், வாகனங்களை சோதனை செய்வதற்கும், கணக்கெடுக்கவும் அனுமதி கிடையாது என்றனர். இதனால் பா.ஜ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அனைவரையும் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அங்கு பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் போலீஸ் சூப்பிரண்டு அனுமதி பெற்று வருமாறு கூறினர், இதையடுத்து பா.ஜ.க.வினர், விவசாய அணியினர் கணக்கெடுப்பை ஒத்திவைத்து விட்டு திரும்பி சென்றனர்.






