அக்னி நட்சத்திரம் தொடக்கம்: முதல் நாளிலேயே பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் குறைவு


அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. பெரம்பலூரில் முதல் நாளிலேயே வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரம்பலூர்

அக்னி நட்சத்திரம் தொடக்கம்

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே பொதுமக்களை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தியது.

மேலும் கடந்த சில நாட்களாகவே கோடை மழையும் மாவட்டத்தில் பரவலாக பெய்தது. நேற்று முன்தினம் கூட மாவட்டத்தில் கோடை மழை பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நேற்று தொடங்கியது.

குடை பிடித்தபடியே...

பெரம்பலூரில் காலை 10 மணியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து சென்றோர் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்றதையும் காணமுடிந்தது. தரைக்கடை வியாபாரிகள் குடை பிடித்தபடியே வியாபாரம் செய்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல வெப்பத்தின் தன்மை குறைந்தது.

மதியத்துக்கு பிறகு வெயில் காணப்படவில்லை. மதியம் 3 மணியளவில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் முதல் நாளிலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாவட்டத்தில் 91.4 டிகிரி அளவு வெயில் பதிவானது.

வெயிலின் கொடுமையை சமாளிக்க...

காலை நேரத்தில் வெயில் கொடுமையை சமாளிக்க நிறைய பேர் பெரம்பலூரில் உள்ள நீச்சல் குளத்தில் குளியல் போட்டனர். வெயிலில் சுற்றியவர்களுக்கு தாகம் அதிகமாக இருந்ததால் சாலையோரங்களில் உள்ள இளநீர், கரும்புச்சாறு, தர்பூசணி, நீர்மோர், குளிர்பானங்கள், முலாம் பழம் ஜூஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த அளவுக்கு வெயிலின் உஷ்ணம் காணப்பட்டது. பெரம்பலூர் நகர, நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் தங்களுக்கு வழங்கப்பட்ட நீர் மோரினை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

மழையளவு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த கோடை மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பெரம்பலூர்-28, செட்டிகுளம்-48, பாடாலூர்-37, அகரம்சீகூர்-52, லெப்பைக்குடிகாடு-20, புதுவேட்டக்குடி-30, எறையூர்-26, கிருஷ்ணாபுரம்-27, தழுதாழை-40, வி.களத்தூர்-16, வேப்பந்தட்டை-50.


Next Story