விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்


விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
x

இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தாலுகா நன்னாட்டாம்பாளையம், சுந்தரிப்பாளையம், எம்.ஜி.ஆர். காலனி, நடுக்காலனி, ஆழங்கால்மேடு, மழவராயனூர் ஆகிய பகுதிகளில் 300 குடும்பங்களில் வாழும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி நடந்த இப்போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் வைகுந்தவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் வரவேற்றார். மாவட்ட தலைவர் அர்ச்சுணன், செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் கண்ணப்பன், விஸ்வநாதன், அழகுநாதன், ராமமூர்த்தி, பிரபாகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் காயத்திரி அபினேஷ், ரம்யா மணிகண்டன், மகேந்திரவள்ளி அய்யப்பன், மங்கைவரம் வைகுந்தவாசன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் 200-க்கும் மேற்பட்டோர், கோரிக்கை மனு கொடுப்பதற்காக விழுப்புரம் தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை விழுப்புரம் தாலுகா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் மனு கொடுப்பதற்காக தாலுகா அலுவலகத்திற்குள் போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்பேரில் அவர்கள், தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story