விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜனதா அரசு மக்களுக்கு விரோதமாகவும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும் வெள்ளையனே வெளியேறு தினத்தில் பிரதமர் மோடி வெளியேற வேண்டும் என்று பெரம்பலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டன.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.

பயிர் காப்பீடு திட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான (100 நாள் வேலை) நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி, அந்த திட்டத்தை நகரங்களுக்கு விரிவுபடுத்தியும், அந்த திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலையும், ஒரு நாளைக்கு ரூ.600 சம்பளமும் வழங்கிட வேண்டும். வருமானவரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 500 வீதம் நிவாரணம் வழங்கிட வேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியைக்குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளுடைய உற்பத்தி செலவை கணக்கிட்டு 1½ மடங்கு வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.

வருவாய் பங்கீட்டு சட்டத்தை ரத்து செய்து ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையை கைவிட வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை மத்திய அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலையரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


Next Story